

தமிழர் கலைகள் – மரபும் மாற்றமும் ஆய்வு மாநாடு – 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, சேர்.பொன்.இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இரண்டாவது பன்னாட்டு ஆய்வு மாநாடு கடந்த ஆண்டு 14.11.2025 அன்று யாழ்.திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டின் பொதுத்தலைவராக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவும் தலைவராகப் பீடாதிபதி திரு.த.றொபேட் அருட்சேகரனும் ஒருங்கிணைப்பாளராக கலாநிதி திருமதி சீதாலஷ;மி பிரபாகரனும் செயலாளராக கலாநிதி திருமதி கிருபாசக்தி கருணாவும் பதிப்பாசிரியராக கலாநிதி திருமதி அருட்செல்வி கிருபைராஜாவும் செயற்பட்டிருந்தனர்.
தமிழர் கலைகள் – மரபும் மாற்றமும் எனும் கருப்பொருளில் இந்த ஆய்வு மாநாடு நடைபெற்றது. நிகழ்வின் முதன்மை விருந்தினராக யாழ்.இந்தியத் துணைத்தூதுவர் ஸ்ரீமான் ஸ்ரீ சாய்முரளி அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாநாட்டின் முதன்மைக் கருத்துரைஞராக சென்னை கலாசேத்திராவின் ஓய்வு நிலைப்; பேராசிரியர் சே.இரகுராமன் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து அழைக்கப்பட்டிருந்தார். ஆய்வாளர் பதிவுடன் தொடங்கிய இந்த ஆய்வு மாநாடு மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டிய அர்ப்பணம் எனும் நிகழ்வுகளைத் தொடர்ந்து வரவேற்புரை, ஆசியுரை, ஒருங்கிணைப்பாளர் உரை, மாநாட்டுத் தலைமை உரை, தலைமை உரை, பிரதம விருந்தினர் உரை, முதன்மைக் கருத்துரைஞர் அறிமுக உரை முதலான உரைகள் இடம்பெற்றதுடன் ஆய்வுத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து விருந்தினர் மதிப்பளிப்புடன் மாநாட்டுச் செயலாளரின் நன்றியுரையும் இடம்பெற்றது.
நான்கு அமர்வுகளாக இம்மாநாட்டிற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகள் பல அளிக்கை செய்யப்பட்டன. இந்த அமர்வுகளின் தலைவர்களாகப் பேராசிரியர் கி.விசாகரூபன், பேராசிரியர் க.மகேஸ்வரன், பேராசிரியர் ஏ.என்.கிருஸ்ணவேணி, பேராசிரியர் ந.சண்முகலிங்கன் ஆகியோர் பணியாற்றியிருந்தனர். இம்மாநாட்டில் வெளிநாட்டு உள்நாட்டு ஆய்வாளர்களின் ஆய்வு அளிக்கைகள் இடம்பெற்றிருந்தன. ஆய்வு மாநாட்டுக் கலை நிகழ்வுகள் 15.11.2025 அன்று மாலை நான்கு மணியில் இருந்து யாழ்.திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற்றது. விரலிசை அமுதம், தமிழிசை அரங்கு, கொஞ்சும் சதங்கை, மணிமேகலை எனும் தலைப்புக்களில் அமைந்த ஆற்றுகை நிகழ்வுகள் இப்பீடத்தின் இசை, வாத்திய இசை, நடன, நாடகத் துறையினரால் அளிக்கை செய்யப்பட்டன. இந்த ஆய்வு மாநாடு தொடர்பான மீளாய்வுக் கூட்டம் 22.01.2026 அன்று சேர்.பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தில் நடைபெற்றது.இந்த ஆய்வுமாநாடும் கலை நிகழ்வுகளும் இந்தியா – இலங்கை அறக்கட்டளையின் அனுசரணையில் மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கான அனைத்து நிகழ்வுகளும் யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஆதரவில் யாழ்.திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.











